ரூர்கேலா(ஒடிசா): 15ஆவது ஹாக்கி உலக கோப்பை போட்டிகள் ஒடிஷாவில் நடைபெறவுள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. சொந்த மண்ணில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்த நிலையில் இன்று(ஜன.5) ஒடிஷாவின் ரூர்கேலாவில், பிர்சா முண்டா ஹாக்கி விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள உலகக் கோப்பை கிராமத்தை ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார். இந்த உலகக் கோப்பை கிராமம் ஒன்பது மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், போட்டியில் பங்கேற்கும் ஹாக்கி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளுடன் 225 அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை கிராமத்தை திறந்து வைத்த பின்னர் இந்திய ஹாக்கி அணி வீரர்களுடன் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உரையாடினார். அப்போது, இந்திய அணி ஹாக்கி உலகக் கோப்பையை வென்றால் ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்திய வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என நம்பி தெரிவித்த முதலமைச்சர், சிறப்பாக விளையாட வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.