புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் பாலசோர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் வரை மாநிலத்தின் மூன்று நகரங்களில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவுக்கு நாள்தோறும் 50 இலவச பேருந்து இயக்கப்படும் என முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி சரக்கு ரயில், சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில் ஆகிய மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில், ஏறத்தாழ 270க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில், அதில் உறவினர் பெயர் இருக்கக் கூடாது என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், எலக்ட்ரானிக் லாக்கிங் முறையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விபத்து நிகழ்ந்ததாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார். விபத்து நடந்த பால்சோர் பகுதியில் மறுசீரமைப்பு பணிகள் அதிதிவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஜூன். 4) இரவுக்குள் சகஜ நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், 2 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடியும் அறிவித்து உள்ளனர். மத்திய அரசு நிவாரணத்தை தவிர்த்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் 5 லட்ச ரூபாய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், ரயில் விபத்து காரணமாக பாலசோர் வழித்தடம் சிதிலமடைந்து உள்ள நிலையில், ஒடிசாவில் இருந்து மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவுக்கு இலவச பேருந்து சேவைகளை முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஏற்பாடு செய்து உள்ளார். பூரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய மூன்று நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பாலசோர் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் வரை இந்த மூன்று நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு 50 இலவச பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இலவச பேருந்துகளுக்கு ஆகும் செலவுகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Odisha train accident: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு... 2 மாதங்களில் அறிக்கை?