இது தொடர்பாக அக்கட்சித் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில் எங்களை வரவேற்கும் காட்சியை விவரிக்க வார்த்தையே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது என்றெல்லாம் கூறியவர்களின் கூற்றை தகர்த்தெறிந்து, தற்போது தலைநிமிர்ந்து சென்று மக்களிடம் வாக்கு கேட்கிறோம்.
அதிமுக அரசின் சாதனைகளைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. இதெல்லாம் நம் வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது. பத்திரிகைகளும், ஊடகங்களும் பரபரப்புக்காகவும், தங்கள் சந்தை மதிப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும், கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்துத் திணிப்பை கையில் எடுத்திருக்கின்றன. கடந்த கால கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் முற்றிலும் தவறாகப் போயின என்பதை நாம் அறிவோம்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் தேர்தல் களம் கண்ட காலங்களில் கூட, கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் திணிக்க முயன்ற கருத்துகள் மக்களின் தேர்தல் தீர்ப்புகளின் முன், முனை மழுங்கிப் போயின. இப்போது, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் நடக்கும் பொய்ப் பிரசாரங்களால் மக்கள் யாரும் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. ஜெயலலிதாவின் அரசியல் பள்ளியில் பாடம் பயின்ற நம்மை இந்த பொய்ப் பிரச்சாரங்களும், கருத்துத் திணிப்புகளும் என்ன செய்ய முடியும்?” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இழிவாக பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்பூ