கடந்தாண்டு டிசம்பர் மாதம், கேரளாவில் உள்ளாட்சித்தேர்தலின்போது, முகக்கவசங்களில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது ட்ரெண்டானது. அதேபோல், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கட்சியின் சின்னங்கள், வேட்பாளரின் சித்திரங்கள் ஆகியவை சூடான தோசையில் இடம்பெற்றுள்ளது. இம்மாதிரியான 'டீக்கடை அரசியல்' என்பது கேரளாவில் புது முயற்சியாக பார்க்கப்படுகிறது.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் தக்காளி சாஸ், கேரட், மயோனிஸ் ஆகியவற்றைக் கொண்டு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் அடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமும்; பொடிசாக நறுக்கப்பட்ட கேரட்டின் மூலம் பாஜகவின் தாமரை சின்னமும் தோசையில் வரையப்பட்டுள்ளன. கடற்கரை சாலையில் அமைந்துள்ள '101 வெரைட்டி தோசை' எனும் கடையில் விற்கப்படும் கட்சிச் சின்னம் வரையப்பட்டுள்ள நறுமணம் மிக்க தோசை மக்களை ஈர்த்து வருகிறது.
தொடக்கத்தில், கட்சியின் சின்னங்கள் மட்டுமே தோசையில் இடம்பெற்றது. பின்னர், மக்களின் கோரிக்கையை ஏற்று வேட்பாளர்களின் சித்திரங்கள் தோசையில் இடம்பெற்றுவருகின்றன.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஷியாம் கூறுகையில், "ஆர்டர் வரும் பட்சத்தில் தோசைகளில் வேட்பாளர்களின் பெயர்கள் பொறிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதன் விளைவாக தோசையில் சின்னங்களை பொறித்து தருகிறோம்" என்றார்.
தற்போது, சின்னக் கட்சிகள் கூட, தோசைகளில் தங்களின் சின்னங்களை பொறித்துதரச் சொல்லி அக்கடைக்குச் செல்கின்றனர். கடைகளில் அரசியல் விவாதங்களுக்கிடையே, சூடான அரசியல் தோசைகளை சுவைத்து மக்கள் உண்டுவருகின்றனர்.