அகர்தலா: ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பாஜகவை நேரடியாக குற்றம் சாட்டிவருகின்றன. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு கவனத்தை ஈர்த்தனர். இருப்பினும், பாஜக எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவந்தது. இதனிடையே அதானி விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவன அறிக்கை அடிப்படையில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதானி விவகாரம் தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், ஹிண்டன்பர்க்-அதானி விவகாரத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அமைச்சராக நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. இருப்பினும், அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதுபோல, பாஜகவிடம் மறைப்பதற்கும், பயப்படுவதற்கும் ஒன்றுமில்லை.
மக்களவையில் ராகுல் காந்தி என்ன பேச விரும்புகிறாரோ, அதற்கேற்பவே அவரது உரை தயாரிக்கப்பட்டிருக்கும். இதற்காக ஆதாரங்களோ ஆவணங்களோ தேவையில்லை. இதுபோன்ற விவகாரங்களில் சாட்சியங்கள் இல்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகள் நீதிமன்றங்களுக்கு ஏன் போகவில்லை. பெகாசஸ் விவகாரத்தின்போதே, ஆதரங்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு கருத்து தெரிவித்திருந்தேன். அவர்களுக்கு கூச்சலிட மட்டுமே தெரியும்.
வேறேதும் தெரியாது. ஆயிரக்கணக்கான சதிகளால் ஒரு உண்மையை மறைக்க முடியாது. அது சூரியனைப்போல பிரகாசமாக இருக்கும். இதுபோன்ற சதிகளை 2002ஆம் ஆண்டு முதலே பிரதமர் மோடிக்கு எதிராக செய்து வருகின்றனர். ஆனால், அவர் ஒவ்வொரு முறையும் மக்களிடையே மேலும் வலிமையாகவும், பிரபலமாகவும் மாறிவருகிறார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு: பிபிசி நிறுவனம்