டெல்லி: காவிரி நீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அறிக்கையை சமர்பித்து உள்ளது. அந்த பதில் அறிக்கையில், “காவிரி மற்றும் கிருஷ்ணா படுகைகளில் அதிகமான வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது மாநில அரசுக்கு பெரும் சுமையாக உள்ளது.
எனவே, வருகிற செப்டம்பர் 12க்குப் பிறகு கர்நாடகாவின் நீர்த்தேக்கங்களில் இருந்து மேற்படி தண்ணீர் திறந்து விடுவதற்கு சாத்தியம் இல்லை. தற்போதைய பிரச்னைக்கு தமிழ்நாடுதான் பொறுப்பேற்க வேண்டும். 04.09.2023 அன்றைய நிலவரப்படி, காவிரிப் படுகையில் 56.043 டிஎம்சி நேரடி சேமிப்பு உள்ளது. 40 டிஎம்சி அளவில் நீர் இருப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11.08.2023 அன்றைய நிலவரப்படி 140 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு தேவை என காவிர் நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு சமர்பிக்கப்பட்டது. 29.08.2023 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் அளித்த அறிவுறுத்தலின்படி, கர்நாடகாவின் தேவைக்கு எந்தவித பணயமும் வைக்கக் கூடாது என அரசு தெரிவித்தது.
கர்நாடகாவின் மொத்த காவிரிப் படுகையில் 60.12 சதவீதத்துக்கும் அதிகமான பற்றாக்குறை இருப்பதாக நாங்கள் (கர்நாடக அரசு) சமர்பிக்கிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் 66 சதவீதம் மழை பற்றாக்குறை உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் கணக்கிட்ட 8.988 டிஎம்சி மழை பற்றாக்குறை என்பது, கர்நாடகாவின் 4 நீர்த்தேக்கங்களிலும் நிலவும் என கூறியதில் எந்த தவறும் இல்லை.
இந்த நிலையில், நாள் ஒன்றுக்கு 24,000 கன அடி நீரை திறந்து விட தமிழ்நாடு வலியுறுத்துவது நியாமம் அற்றது. இந்த 2023 - 2024 ஒரு சாதாரண நீர் ஆண்டு. ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 3 வரையிலான ஆறு நாட்களுக்கு, பிலிகுண்டுலுவில் சராசரியாக 30,000 கனஅடிக்கு 37,869 கன அடி நீர்வரத்து உள்ளது” என தெரிவித்து உள்ளது.
முன்னதாக கடந்த வாரம், ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 26 வரை பிலிகுண்டுலுவில் மொத்தம் 1,49,898 கன அடி தண்ணீரை திறந்து விடுவதன் மூலம் கர்நாடகா, தனது உத்தரவுகளை நிறைவேற்றி உள்ளதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், பிலிகுண்டுலுவில் 29.08.2023 அன்று காலை 8 மணிக்கு தொடங்கி அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் பாய்கிறது என்றும் தெரிவித்து இருந்தது.
பில்லிகுண்டுலுவில் உள்ள காவிரி நீர்த்தேக்கங்களில் இருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 24 ஆயிரம் கன அடி வீதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவிரி நீர் பங்கீடு விவகாரம்: தமிழக அரசு அறிக்கை வெளியீடு!