டெல்லி: நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்குத்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது.
இதைத்தொடர்ந்து நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் உள்ள யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்று(ஆகஸ்ட் 3) சீல் வைத்தனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, "நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் உண்மையை மறைத்துவிட முடியாது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் நடக்கும் அனைத்தும் எங்களை மிரட்டும் முயற்சி.
அழுத்தம் கொடுப்பதால், எங்களை அமைதியாக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் ஜனநாயகத்திற்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் அதை எதிர்ப்போம்" என்று கூறினார்.