டெல்லி : ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறிய விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (மார்ச் 26) குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை என்னிடமும் பார்க்க கூறினார்கள். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். கடந்த 8 ஆண்டுகளில் ஏதேனும் ஒரு பண்டிட் குடும்பத்தையாவது பாஜக காஷ்மீரில் மறுகுடியமர்த்தியதா?. இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது” என்றார்.
தொடர்ந்து, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை வலையொளியில் (யூ-ட்யூப்) பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார். இது குறித்து கெஜ்ரிவால், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். அதில் கிடைக்கும் பணம் காஷ்மீரி பண்டிட்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும்” என்றார்.
டெல்லி பட்ஜெட்டின்போது வியாழக்கிழமை (மார்ச் 24), “தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது பிரச்சினை ஆன நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், “படத்தை வலையொளியில் இலவசமாக அனைவரும் பார்க்க வழிவகை செய்ய வேண்டும்” என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் 1989-90களில் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பேசுகிறது.
இந்தப் படத்துக்கு பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, அஸ்ஸாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது- காங்கிரஸ்