எர்ணாகுளம்: கேரள மாநிலத்தில் கக்கநாடு பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் பயிலும் 62 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், இருவருக்கு நோரோ வைரஸ் (Norovirus) பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து எர்ணாகுளம் பகுதியில் மொத்தம் மூன்று மாணவர்கள் இந்த வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உடல்நிலை நிலையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், “இந்த நோரோ வைரஸ் என்பது விலங்குகளிலிருந்து பரவக்கூடியது. பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும். எனவே நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, காய்ச்சல், உடல் வலி, தலைவலி மற்றும் குமட்டல் போன்றவை இதற்கான முக்கிய அறிகுறிகளாகும். இந்த அறிகுறி உள்ளவர்கள் ORS கலவையை, சுட வைத்து ஆறவைத்த தண்ணீரில் கலந்து குடிக்கலாம். ஆனால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தீவிரமடைந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த வைரஸ் பெரும்பாலும் சிறுவர்களையும், வயது முதிர்ந்தவர்களையுமே பெரும் அளவில் பாதிக்கிறது. மேலும் பாதிப்பு சரியாகி இரண்டு நாட்கள் வரை, இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே குணமாகி இரண்டு நாட்களுக்குப் பின்னரே வெளியே செல்ல வேண்டும்.
இதனைத் தடுக்க சுகாதாரம் மிகவும் முக்கியமானது. கழிப்பறையைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் சோப்பைப் பயன்படுத்தி கைகளைக் கழுவ வேண்டும். விலங்குகளுடன் பழகுபவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கிணறுகள், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்களை குளோரினேஷன் செய்ய வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
மக்கள் தண்ணீரைச் சுட வைத்து மட்டுமே குடிக்க வேண்டும் மற்றும் சாப்பிடுவதற்கு முன்பு காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவ வேண்டும். மேலும், திறந்த வெளியில் அதிக நேரம் வைக்கப்படும் உணவுகளை உண்ணவேண்டாம். கடல் மீன்களை நன்கு சமைத்து உண்ண வேண்டும்” என்று சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கென்ய மூதாட்டிக்கு அரிய இதய அறுவை சிகிச்சை - கர்நாடக மருத்துவர்கள் சாதனை!