திருவனந்தபுரம்: இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் இணைந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இந்தப் போராட்டத்திற்கு மாநில அரசும் ஆதரவளித்து, மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கத்தை காலை 6 மணிமுதல் நிறுத்திவைத்துள்ளன.
வணிக ரீதியாகச் செயல்படும் ஆட்டோ, சீருந்து (டாக்ஸி), லாரிகள் இயக்கத்தில் எவ்வித தடையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பாஜகவின் தொழிற்சங்க கூட்டமைப்புகள் பங்கேற்கவில்லை.
இந்த வேலைநிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலத்தில் நடைபெறவிருந்த பத்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும், தொழில்துறைத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் அனைத்தும் வரும் எட்டாம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஏபிஜே அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், கேரளா, கொச்சி, மகாத்மா காந்தி பல்கலைக்கழகங்களும் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தால் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.