உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த அகிலானந்த் ராவ் என்பவர், சமூக ஊடகங்களில் பலரை விமர்சித்து கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்த சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியினர் அளித்தப் புகாரின்பேரில், அகிலானந்த் ராவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ், கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் சில உயர் காவல் துறை அலுவலர்கள் குறித்தும் தவறாகப் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அகிலானந்த் ராவை கடந்த மே 12ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று(நவ.05) அகிலானந்த் ராவின் பிணை மனு நீதிபதி சித்தார்த்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்டுள்ள அகிலானந்த் ராவ் 2 ஆண்டுகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். நீதிபதியின் விநோத தீர்ப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.