இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் தெரிவித்துள்ளார்.
நான்காவது நாள் மழைக்கால கூட்டத் தொடர் இன்று (ஜூலை 23) காலை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே எதிர்க்கட்சிகள் விவசாயிகள் பிரச்சினை, பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக (ஜூலை 26) திங்கள்கிழமை வரை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், கரோனா சூழலில் நீட் தேர்வு நடத்தப்படுமா என தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய சுகாதாரத் துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறும். மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு மையங்கள் அதிகரிக்கப்படும். நீட் தேர்வு மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யும் எண்ணம் கிடையாது என்றார்.
துபாயில் உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக அங்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. கரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த இத்தேர்வு செப்டம்பர் மாதத்துக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சரின் அறிக்கையைக் கிழித்து எறிந்த விவகாரம்: எம்பி சாந்தனு சென் இடைநீக்கம்