கொச்சி: கேரளாவில் ஆன்லைன் செய்தி சேனலின் உரிமையாளர், அம்மாநில பெண் அமைச்சர் ஒருவரது மார்ஃபிங் வீடியோவை உருவாக்க முற்பட்டார். பெண் அமைச்சர் நிர்வாணமாக இருக்கும் வகையில் வீடியோவை தயாரிக்க இருந்ததாகத் தெரிகிறது. அதற்காக அந்தச் செய்தி சேனலில் பணிபுரிந்த பெண்மணி ஒருவரை, நிர்வாணமாக வீடியோவில் நடிக்கும்படி, சேனலின் உரிமையாளரும், ஒரு ஊடகவியலாளரும் வற்புறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக அந்த பெண்மணி போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஆன்லைன் செய்தி சேனலின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதற்காக அந்த பெண்மணியை பழிவாங்கும் நோக்கில், அவரை இழிவுபடுத்தும் வகையில் அவதூறான செய்திகளை இரண்டு ஊடகவியலாளர்கள் தங்களது ஆன்லைன் செய்தி சேனலில் வெளியிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அளித்தப் புகாரின் பேரில், இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி இரு ஊடகவியலாளர்களும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அங்கு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் இன்று(மார்ச்.20) நீதிபதி விஜி அருண் முன்பு விசாரணைக்கு வந்தன. அப்போது பாதிக்கப்பட்ட பெண்மணி தரப்பில், தான் ஒரு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தே, தன்னை இழிவுபடுத்தும் வகையில் இந்த செய்திகள் வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். மேலும், தாங்கள் செய்தி வெளியிட்டது அந்த பெண்ணை இழிவுபடுத்துவதற்காக இல்லை என்றும், இது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வராது என்றும் கூறினர். மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்த நீதிபதி, கடும் கண்டனத்தைத் தெரிவித்தார்.
சரியான காரணமில்லாமல் பொதுமக்களின் அந்தரங்க, தனிப்பட்ட வாழ்க்கையில் எட்டிப்பார்க்க ஊடகங்களுக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ அல்லது தனி நபருக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்று தெரிவித்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்குவதற்கு ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் இடையூறு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
சில செய்தி சேனல்கள் செய்திகளை விட சுவாரசியமாக இருப்பதற்காக மோசமான மலிவான உள்ளடக்கங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்றும் கூறினார். பொதுமக்களில் சிலரும் இதுபோன்ற பரபரப்பான மற்றும் மலிவான செய்திகளை விரும்புகிறார்கள் என்றும், நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை கொஞ்சம் கொஞ்சமாக அதன் இயல்பை இழந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒருவரின் அந்தரங்கத்தை பொதுவெளியில் பரப்புவது மோசமான செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண்மணி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தே அவரை அவமதிக்கும் வகையில் செய்தி வெளியிடுவது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில்தான் வரும் என்றும் கூறி, முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.