கோவிட்-19 பாதிப்புகள் தொடர்பான பொது நல வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று(ஏப்.30) விசாரித்தது. இந்த விசாரணையில், கோவிட்-19 தொடர்பாக பொதுமக்கள் சமூக வலைதளங்களில் தங்கள் துயரங்களையும், தேவைகளையும் பதிவிடுவதைத் தவறான தகவலாகப் பார்க்கக்கூடாது.
இதுபோன்ற துயரப் பதிவுகளைத் தடுத்து நிறுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். நீதிமன்றத்தின் இந்தக் கருத்தை அனைத்து மாநில டிஜிபிக்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்வது குறித்தும், மத்திய அரசு முறையான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என, உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆக்ஸிஜன், படுக்கைத் தட்டுப்பாடு போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டு, சில இடங்களில் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட அறிவுறுத்தலை டிஜிபிக்களுக்கு வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டம்: இதுவரை 2.45 கோடி பேர் முன்பதிவு!