கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கூறியுள்ளார். குறிப்பிட்ட பெண்ணை அவரது மாமியார் கொடுமைப்படுத்தியதாகவும் அறியமுடிகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தொடுத்த வழக்கில், முத்தலாக் தடைச் சட்டத்தின்கீழ் அவரது கணவர் கைதுசெய்யப்பட்டார். அத்துடன் அவரது மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட அப்பெண்ணின் கணவரும், மாமியாரும் பிணை கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அவர்கள் இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தனர்.
அம்மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி, இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன. 02) விசாரணைக்கு வந்தது.
மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், “இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம் 2019-யின் 3ஆவது பிரிவின் கீழ் இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவிகளிடம் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வதை சட்டவிரோதமான செயலாக கருதப்படும்.
சட்டத்தின் நான்காவது பிரிவின்கீழ் அவ்வாறு செய்யும் ஆண்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கலாம். இவ்வாறாக கூறி விவாகரத்து செய்யும் ஆண்கள் தங்களின் மனைவிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரின் ரத்த சொந்தமோ இது குறித்து புகார் அளிக்கலாம். முத்தலாக் தொடர்பான புகாரில் பிணையில் வெளிவர இயலாத வகையிலும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்யலாம். முத்தலாக் கூறிய வழக்கில் கைதுசெய்யப்படுவோர் வெளியே வர வேண்டும் எனில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருத்தின் அடிப்படையில் மட்டுமே பிணை வழங்கப்படும் எனச் சட்டம் கூறுகிறது.
எனவே, குற்றத்தைச் செய்தவர்களுக்குப் பிணை வழங்குவதில் தடை இல்லை. கைதுசெய்யப்படுவதற்கு முன் பிணையை அளிக்கும் முன்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒப்புதலை நீதிமன்றம் கேட்க வேண்டும்.
சிஆர்பிசியின் பிரிவு 438, இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 7 (சி) ஆகியவற்றின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு முன் பிணை வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்துள்ளோம். வழங்குவதற்கு முன், புகார் அளித்த திருமணமான இஸ்லாமிய பெண்ணை தகுதிவாய்ந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.
அத்துடன், இந்த வழக்கில் இணைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள பெண்ணின் மாமியாருக்கு முன் பிணை வழங்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை” எனத் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க : கோவாக்சின் தடுப்பூசி: அவசரகால அனுமதிக்குப் பரிந்துரை