பிகார் மாநிலத்தின் 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை களம் தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு முக்கிய அரசியல் கூட்டணிகளாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான மகா கூட்டணியும், முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியும் நேருக்கு நேர் அரசியல் சண்டையிட்டு வருகின்றன.
முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் மூத்தத் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், இன்று (நவம்பர் 2) பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க மத்திய சட்டம், நீதி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிகார் வந்தடைந்தார்.
அப்போது ஊடகங்களிடையே பேசிய அவர், "பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும். லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் என்.டி.ஏ-வில் இருந்து வெளியேறிவிட்டார். அவருக்கு பிகாரில் தனது சொந்த கட்சி உள்ளது.
பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் எங்கள் கூட்டணியின் தலைவர். நேர்மையான ஆட்சி, வெளிப்படையான நிர்வாகம் இவற்றை உறுதிசெய்ய பிகார் மக்களுக்கு யாரை வாக்களிக்க வேண்டும் என்று தெரியும். மாநில வளர்ச்சி மற்றும் முன்னேற்றப் பணிகள் பிகாரில் இருந்து புதிய பாதை தொடங்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்மொழிந்துள்ளார்.
ராஷ்ரிய ஜனதா தகத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் ஆட்சிக் காலத்தில் 55,000 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது ஆறு லட்சம் பேருக்கு நிதிஷ் குமார் அரசின் கீழ் வேலை கிடைத்துள்ளது" என்றார்.