நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழலில் அத்துடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகள் முன்னெடுத்துவருகின்றன. குறிப்பாக பிகார் மாநிலத்திலிருந்து இதற்கான குரல் ஓங்கி ஒலிக்கத்தொடங்கியுள்ளது.
அம்மாநில முதலமைச்சரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூத்தத் தலைவருமான நிதிஷ் குமார் இந்தக் கோரிக்கையைப் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாக முன்வைத்தார். இதற்காக நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வினி யாதவ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பிரிதிநிதிகள் டெல்லி சென்று பிரதமரைப் பார்த்தனர்.
இந்நிலையில், இக்கோரிக்கையை நிதிஷ் குமார் பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் நலனுக்கு அவசியமான ஒன்று.
எனவே, சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டை அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் நாட்டின் சமூகப் பொருளாதார நிலை சிறந்த பாதைக்கு நிச்சயம் செல்லும்" எனக் கூறினார்.
இந்தக் கோரிக்கை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வாதத்திற்கு வந்தபோது, இதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்