புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த ஜாஸ்லின் மேரி, சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவரது தொலைபேசிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தன்னை பிரான்ஸ் நாட்டு தூதரக அலுவலராக அறிமுகபடுத்திக்கொண்டு, பிரான்ஸ் விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாகவும்; அதற்கு தனது வங்கி கணக்கில் 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
கைவரிசை காட்டிய நைஜீரியா இளைஞர்
இதனை நம்பிய ஜாஸ்லின் மேரி அந்த போலி தூதரக அலுவலரின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் வேலை வாங்கி தராமல் தனது தொலைபேசியை அனைத்து வைத்துவிட்டு மாயம் ஆகியுள்ளார்.
இது குறித்து ஜாஸ்லின் மேரி புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அந்த நபரின் தொலைபேசி எண், வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்திவந்தனர். அதில் ஜாஸ்லின் மேரியை ஏமாற்றியது நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் என தெரியவந்தது.
காவல் துறையினரிடம் சிக்கிய இளைஞர்
இதையடுத்து பெங்களூரு எலஹன்கா பகுதியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டைவோ அத்வேலை, காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
பின் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து வருகின்ற திங்கள்கிழமை அன்று டைவோ அத்வேலை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் க்ரைம் காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அவரை காவலில் எடுத்து விசாரணை செய்த பிறகே அவர் மோசடி செய்த பணம் குறித்தும்; இதேபோல் அவர் வேறு யாரிடமாவது பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் தெரியவரும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மண் சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு