டெல்லியில் 30 வயதான நைஜீரியப் பெண்ணுக்கு குரங்கம்மை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். டெல்லியில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து எல்என்ஜேபி மருத்துவமனை தரப்பில், இந்த எட்டு பேரில் 3 ஆண்கள், 5 பெண்கள் அடங்குவர். இவர்களுக்கு லேசான காய்ச்சல், தோல் புண்கள், நிணநீர் அழற்சி, தலைவலி, தசைவலி, சோர்வு, தொண்டை வலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளன. முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 3 நோயாளிகள் நலமாக உள்ளனர். விரைவில் வீடு திரும்ப உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஜூலை 24ஆம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகம் முழுவதும் 92 நாடுகளில் 35,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.
இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...