நாட்டின் 75ஆவது சுதந்திர தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சுதந்திரத்திற்காக போராடிய மக்களின் வரலாறு, சாதனைகள் ஆகியவற்றை நினைவுகூறும் வகையில், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 'ஆசாதி கா அமிர்த உத்ஸவ்' எனும் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு
அதன்படி, உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களும், கட்டடங்களும் மூவர்ணத்தில் ஒளிரும் வகையிலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் புகழ்பெற்ற கட்டடங்களும் சுற்றுலாத் தலங்களும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி காலை வரை இந்த நிகழ்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயாகரா முதல் புர்ஜ் கலிஃபா வரை...
கனடாவில் உள்ள புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகம், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டடம், துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, ரஷ்யாவின் பரிணாம கோபுரம், சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற ADNOC குழுமத்தின் கோபுரம், இங்கிலாந்தின் பர்மிங்காம் நூலகம் ஆகியவை மூவர்ணத்தில் ஒளிர உள்ள இடங்களில் முக்கியமானவை.
இந்நிலையில் இதுகுறித்து, ”இந்தியாவின் சுதந்திர வரலாற்றோடு தொடர்புடைய பெருமையான தருணங்களை நினைவுகூற இந்தப் பிரச்சாரம் வழிவகுக்கும். வெளிநாடுகளில் வாழும் ஏராளமான இந்தியர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இந்தப் பிரச்சாரத்தில் இணைந்து வருகின்றனர்” என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்
மகாத்மா காந்தி 1930ஆம் ஆண்டு தண்டியாத்திரையைத் தொடங்கிய நாளை நினைவுகூறும் வகையில், 'ஆசாதி கா அமிர்த மஹோத்ஸவ்' பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மார்ச் 12ஆம் தேதி தொடங்கி வைத்தார். இந்தப் பிரச்சாரம் 2023 ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலிபான்களுடன் ஆப்கான் அரசு தொடர்ந்து சண்டையிடும்- அம்ருல்லா சலே