பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மஞ்சுநாதா நகரில் வசித்து வந்த ஆரிஃப் என்பவர் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக இன்று (பிப். 11) கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் மாநில பாதுகாப்புத்துறை ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை தரப்பில், ஆரிஃப், தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாளராக இருந்தார். இதனிடையே வீட்டில் இருந்து பணிபுரிந்து வந்தார். இவருக்கு அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், அவரை கண்காணித்து வந்தோம்.
இந்த கண்காணிப்பு மூலம் அவர் 2 ஆண்டுகளாக அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் டெலிகிராம் குழுக்களில் இவர் உறுப்பினராக செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகவே, மாநில பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் சேர்ந்து அவரை கைது செய்துள்ளோம்.
முதல்கட்ட தகவலில் அவர் மார்ச் மாதம் ஈராக் வழியாக சிரியா செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இவரது சொந்த ஊர் நண்பர்கள், உறவினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை உக்கடம் பகுதியில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக முகமது தல்கா,முகமது தவ்பிக், உமர் பாரூக் மற்றும் பெரோஸ் கான்ஷேக் இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்னிந்தியாவில் பயங்கரவாத நடமாட்டம் குறித்து என்ஐஏ தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு; கைதான நபர்களிடம் என்ஐஏ மீண்டும் விசாரணை?