ஶ்ரீநகர்: காஷ்மீரை இந்தியாவிலிருந்து பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 'ஹூரியத் மாநாடு கூட்டமைப்பு' செயல்பட்டு வந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு இந்த அமைப்பு வலுவிழந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த அமைப்பின் அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
ஹூரியத் மாநாடு மற்றும் பல பிரிவாத அமைப்புகள் ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதாக என்ஐஏ தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளிடமிருந்து நிதியுதவி பெற்று காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கு வழங்கியது தொடர்பான வழக்கில், கடந்த 2017ஆம் ஆண்டு ஹூரியத் அமைப்பைச் சேர்ந்த நயீம்கான் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை ஹூரியத் மாநாடு அமைப்பு சஸ்பெண்ட் செய்தது.
நயீம்கான் வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நயீம்கான் மற்றும் ஹூரியத் மாநாடு கூட்டமைப்புக்கு சொந்தமான அலுவலகத்தை பறிமுதல் செய்ய அனுமதிகோரி என்ஐஏ தரப்பில், டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று(ஜன.28) விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஹூரியத் மாநாடு அமைப்பின் சொத்தை பறிமுதல் செய்ய அனுமதி அளித்தது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று ராஜ்பாக்கில் உள்ள ஹூரியத் மாநாடு அமைப்பின் அலுவலகத்தை என்ஐஏ அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.