சண்டிகர் : சுதந்திர தின கொண்டாட்டத்தை சீரழிக்கும் சதித் திட்டத்துடன் தயாராக இருந்த 5 பேர் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் பஞ்சாப் போலீசார் கூட்டாக கைது செய்தனர்.
ஆகஸ்ட் 15, நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தலைநகர் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் வழக்கத்திற்கு மாறாக கூடுதலாக பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் அமிர்தரசில் பயங்கரவாத திட்டத்துடன் கும்பல் ஊடுருவி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
பஞ்சாப் போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பினர், 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பிடிப்பட்ட 5 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஹர்விந்தர் ரிண்டா, மற்றும் கேங்ஸ்டர் கோல்டி பிரார் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பஞ்சாப்பில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட இந்த 5 பேரும் திட்டமிட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் 5 பேருக்கும் நிதி உள்ளிட்ட உதவிகள் அமெரிக்காவில் இருந்து வழங்கப்பட்டதாகவும், அதை கொண்டு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கொள்முதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டதாகவும், எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தொடர்புடைய பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் மற்றும் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கோல்டி பிரார் ஆகியோருடன் இந்த 5 பேருக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்து உள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
5 பேர் கைதை தொடர்ந்து பஞ்சாப், அமிர்தசரஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : வருமான வரி விவகாரத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!