மகாராஷ்டிரா: மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான்கள் பெயரில், என்ஐஏ மின்னஞ்சல் மூலம் மிரட்டல் இன்று (பிப்.3) விடப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் முக்கியப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு என்ஐஏ மும்பை போலீசாருக்கு எச்சரிக்கை(Mumbai terror alert) விடுத்துள்ளனர்.
மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த உள்ளதாக தேசிய புலனாய்வு முகமைக்கு தலிபான் என்ற பெயரில் மின்னஞ்சல் வந்துள்ளது. அதில், தலிபான் தலைவர் சிராஜுதீன் ஹக்கானியின் உத்தரவின் பேரில் இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து என்ஐஏ அதிகாரிகள், மும்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, அம்மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மாநிலத்தின் முக்கிய நகரங்களில் தீவிர சோதனைகள் நடத்தவும் பாதுபாகாப்பை பலப்படுத்தவும் போலீசாருக்கு என்ஐஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதேநேரத்தில் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பியது யார்? எங்கிருந்து அனுப்பினார்? என்பன உள்ளிட்ட விசாரணையில் என்ஐஏ அதிகாரிகளும், மும்பை மாநில போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன் மும்பையில் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது. இப்போது மும்பை காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் மற்றொரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது, இந்த முறை ஹாஜியாலி தர்கா மீது பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருந்தது. இந்த போன் உல்லாஸ்நகரில் இருந்து வந்ததாகவும், இந்த போனை மும்பை போலீசார் கண்டுபிடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மும்பையில் புகழ்பெற்ற ஹாஜியாலி தர்காவிற்கு வெடிகுண்டு மிரட்டலும், அம்பானிக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலப் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, இம்முறை நேரடியாக என்ஐஏ அதிகாரிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொது இடங்களில் சந்தேகப்படும்படியான ஏதேனும் பொருட்களை பொதுமக்கள் கண்டால் உடனடியாக, மும்பை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடத்தல் வழக்கு: ராஜஸ்தான் அமைச்சர் மீது எப்ஐஆர் பதிவு