கங்கை நதியில், கடந்த சில நாள்களாகவே அடையாளம் தெரியாத சடலங்கள் தொடந்து மிதந்துவருவகின்றன. குறிப்பாக, கடந்த செவ்வாய்க்கிழமை (மே.11) தேதி கரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்கள் பிகார் பகுதியில் உள்ள கங்கை நதியில் மிதந்தன. இதற்கு உத்தரப் பிரதேச மாநிலத்தை பிகார் அரசு குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இரு மாநில அரசு தலைமைச் செயலாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்திற்கும், இது தொடர்பாக நான்கு வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கங்கையில் பாதி எரிந்த அல்லது முற்றிலும் எரியாத சடலங்கள் அதிகமாக மிதந்துவருவது மிகவும் கவலைக்குரியது எனத் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையம் இதுபோன்ற செயல்பாடுகள் விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது என கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது என, ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.