டெல்லி: அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் உள்ள முக்ரோக் சோதனை சாவடி வழியாக நவம்பர் 22ஆம் தேதி லாரியில் சட்டவிரோதமாக மரக்கட்டைகள் கொண்டுசெல்லப்பட்டன. இதனால் சோதனை சாவடி போலீசார் லாரி ஓட்டுநர் உள்பட 3 பேரையும் கைது செய்து ஜிரிகெண்டிங் காவல் நிலையத்தில் அடைத்தனர். இவர்களை விடுவிக்குமாறு மேகாலயாவிலிருந்து 50-க்கும் மேற்பட்ட மக்கள் ஆயுதங்களுடன் காவல் நிலையம் முன்பு குவிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனிடையே வனக்காவலர் ஒருவரும் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அஸ்ஸாம்-மேகாலயா எல்லை பிரச்சனை காரணமாகவே நடந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லாவிடம் இந்த மோதல் குறித்து விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம், "இதுபோன்ற சம்பவம் கட்டாயமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மாநிலங்களுக்கு இடையே பிரச்சனையாகவே இருந்தாலும் கூட போலீசார் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். இரண்டு மாநிலங்களுக்கு இடையே எல்லை தொடர்பாக பிரச்சனை இருக்கும் சூழலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து மத்திய உள்துறை செயலாளர் மற்றும் அசாம் தலைமைச் செயலாளர் இருவரும் 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி கொலை வழக்கு.. பட்டாக்கத்திகளுடன் போலீஸ் வாகனம் வழிமறிப்பு.. 2 பேருக்கு நீதிமன்ற காவல்..