பாட்னா: பீஹாரில் கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியை பிடித்தது. கூட்டணி வைத்தபோதும், மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக பேசப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆட்சி அமைந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக மற்றும் ஜேடியு உறவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வந்தது. அண்மைக்காலமாக மத்திய அரசின் நிகழ்ச்சிகளை முதலமைச்சர் நிதிஷ்குமார் புறக்கணித்து வந்தார். அக்னிபாத் போராட்டங்கள் இந்த விரிசலை அதிகப்படுத்தின. தற்போது கூட்டணியே உடையும் நிலை வந்துவிட்டதாக தெரிகிறது.
மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே பாஜகவிலிருந்து விலகும் முடிவுக்கு ஐக்கிய ஜனதா தளம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டால், தாங்கள் கூட்டணி வைக்க தயார் என ராஷ்ட்ரிய ஜனதா தளமும் பச்சைக் கொடி காட்டியுள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகளும் நாளை(ஆகஸ்ட் 8) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், காங்கிரசும் தங்களது கூட்டணி கட்சி எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் நிதிஷ் குமார் தொலைபேசி வாயிலாக பேசியதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கைகளால் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 125 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், பாஜகவிடம் 74 எம்எல்ஏக்களும், ஜேடியுக்கு 43 எம்எல்ஏக்களும் இருக்கின்றனர். எதிர்க்கட்சியான ஆர்ஜேடியிடம் 115 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரசிடம் 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதன்படி, ஐக்கிய ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்தால், புதிய ஆட்சியை அமைக்க முடியும். இதை நோக்கியே ஐக்கிய ஜனதா தளம் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. பீஹார் அரசியலில் நாளை மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆட்சியை மாற்றியமைக்கும் முக்கிய முடிவை முதலமைச்சர் நிதிஷ்குமார் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.