தைத் திருநாள் கொண்டாட்டம் கோலாகலம்:
தமிழர்கள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த அரிசியுடன் சர்க்கரை, பால், நெய் ஆகியவற்றைக் கொண்டு, புதுப்பானையில் பொங்கலிட்டு, சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நாளே பொங்கல் விழாவாகும். தமிழர் திருநாளான பொங்கல் தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மொரிசீயஸ் எனத்தமிழர்கள் அதிகம் வாழும் அனைத்து நாடுகளிலும் பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவைக் காண ராகுல்காந்தி இன்று தனி விமானத்தில் மதுரை வருகை:
மதுரை - அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளான இன்று (வியாழக்கிழமை) ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்த விழாவைக் காண காங்கிரஸ் கட்சியின் முக்கியத்தலைவரான ராகுல் காந்தி மதுரை வருகிறார். அவர், 'ராகுலின் தமிழ் வணக்கம்' என்ற பெயரில் தமிழர்களின் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையிடுகிறார்.
இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு இன்று பகல் 11.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அவனியாபுரம் பகுதிக்கு வருகை தருகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் அவர் தமிழர்களின் வீர விளையாட்டை மேடையில் அமர்ந்து காண்கிறார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேற்பார்வையாளர் தினேஷ் குண்டுராவ், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வருகிறார்கள்.
சபரிமலையில் இன்று மகரஜோதி!
கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் மகரவிளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு விழா இன்று சபரிமலையில் நடைபெறுகிறது. பந்தளத்திலிருந்து புறப்பட்ட 'திருவாபரண பவனி' இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்குப் பின்னர் 'திருவாபரணங்கள்' சன்னிதானத்துக்கு கொண்டுவரப்படும். மாலை 6:25 மணிக்கு 18ஆம் படி வழியாக சோபானத்திற்கு வந்ததும் தந்திரியும், மேல்சாந்தியும் திருவாபரணத்தை வாங்கி நடை அடைத்து, ஐயப்பனின் சிலையில் ஆபரணங்கள் அணிவிப்பர். தொடர்ந்து நடை திறந்து தீபாராதனை நடைபெறும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் 'மகரஜோதி' வடிவில் காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ட்ரம்புக்கு 'கெட் அவுட்' சொன்ன அமெரிக்க நாடாளுமன்றம்!
அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானம் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, ட்ரம்பின் குடியரசு கட்சியினர் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். பிரதிநிதிகள் சபையைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானம் செனட் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும். ஆனால், ட்ரம்ப்பின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஏழு நாள்களே உள்ள நிலையில், செனட் சபையில் கூட மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. இருப்பினும், அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபருக்கு எதிராக இரண்டு முறை பதவி நீக்கம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இலங்கை - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்!
இலங்கை, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே நகரில் இன்று தொடங்குகிறது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கி ஜனவரி 18ஆம் தேதி வரையிலும், 2ஆவது டெஸ்ட் ஜனவரி 22ஆம் தேதி முதல் ஜனவரி 26ஆம் தேதி வரையிலும் நடக்க உள்ளன. கரோனா பீதி காரணமாக 2 போட்டிகளும் காலே சர்வதேச மைதானத்தில் மட்டுமே நடக்கின்றன. போட்டிக்கு முன்பு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லாவிட்டாலும் 2 கட்ட கரோனா சோதனைக்குப் பிறகுதான் வீரர்கள் இன்று களம் காண உள்ளனர்.