பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய முடிவு!
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேசிய பிறகு, நவம்பர் 12ஆம் தேதி (இன்று) இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடி தலைமையில் ஆசியான் மாநாடு!
கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க பத்தாவது ஆசியான் மாநாடு நடைபெற உள்ளது. இதில், மற்ற நாடுகளுடனான உறவை வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 17ஆவது ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி இணையவழி காணொலி மூலம் இன்று கலந்துகொள்ள உள்ளார்.
மருத்துவப் படிப்பு - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், இதற்கான தரவரிசைப் பட்டியல் திட்டமிட்டபடி வரும் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். மேலும், தரவரிசைப் பட்டியல் வெளியாகும் அன்றே கலந்தாய்வு அட்டவணை வெளியாகும் என்றும் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
இன்று முதல் மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு!
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "சென்னையில் இன்று முதல் மெட்ரோ ரயிலின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை, அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும். திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ சேவை இயக்கப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!
இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கடலோரப் பகுதிகளில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.