கர்னூல்: ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவரையும் அவரது தாயாரையும் தனது தந்தை உடன் கூட்டு சேர்ந்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து கர்னூல் டவுன் போலீஸார் கூறுகையில், கர்னூலை சேர்ந்த பிடெக் பட்டதாரி ஷ்ரவன் குமார் என்பவருக்கும், ருக்மணி என்பவருக்கும் மார்ச் 1ஆம் தேதி திருமணம் நடந்தது.
இதற்கு முன்னதாகவே ஷ்ரவன் குமார் புதியதாக வாங்கிய ஸ்மார்ட்போனை ருக்மணிக்கு கொடுத்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனில் தனது இ-மெயில் ஐடியை பயன்படுத்தி ஆப்ஸ்களை டவுன்லோட் செய்தது மட்டுமல்லாமல், அதன் மூலம் ருக்மணி யாரிடம் பேசுகிறார் என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இதன் மூலம் ருக்மணிக்கும், கர்னூலை சேர்ந்த ராகவேந்திர கவுட் என்பவருக்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்தார்.
இருப்பினும், திருமணத்துக்கு பின் சரியாகிவிடும் என்று முடிவு செய்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால், திருமணத்துக்கு பின்பும் ருக்மணி, ராகவேந்திர கவுட் உடன் பேசுவதை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் ருக்மணிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரத்தை ஷ்ரவன் குமார் தனது தந்தை வரபிரசாத் மற்றும் தாயார் கிருஷ்ணவேணியிடம் தெரிவித்துள்ளார். அப்போதே விரோதம் துளிர்விட்டுள்ளது.
இதனிடையே ஷ்ரவன் குமாரை அவரது மாமியார் கோட்டா ரமாதேவி, ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு அவருக்கு விருத்தசேதனம் (ஆணு உறுப்பின் முன்தோலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கும் முறை) செய்யுமாறு தெரிவித்துள்ளார். அதன்படியே அவரும் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த ஷ்ரவன் குமாரின் தந்தை வரபிரசாத் மற்றும் தாயார் கிருஷ்ணவேணி இருவரும் தனது மகனின் ஆண்மையை பற்றி குறை கூறுவதற்காக திட்டமிட்டு விருத்தசேதனம் செய்துள்ளதாக சந்தேகித்து அவர்களை பழிவாங்க திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஷ்ரவன் குமாரிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அவர் மனைவியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் ஷ்ரவன் குமார், மார்ச் 14ஆம் தேதி கர்னூலில் உள்ள தனது வீட்டுக்கு மாமியார் கோட்டா ரமாதேவி, மாமனார் கோட்டா வெங்கடேஷ் இருவரையும் அழைத்துள்ளார். இவர்களும் அங்கு சென்றுள்ளனர். இதையடுத்து ஷ்ரவன் குமார் தனது தந்தை வரபிரசாத்தும் சேர்ந்து முதலில் மனைவி ருக்மணியையும், மாமியார் கோட்டா ரமாதேவியையும் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனிடையே மாமனார் கோட்டா வெங்கடேஷ் அவர்களை தடுக்கவே அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடினார். இதற்கு ஷ்ரவன் குமாரின் தாய் கிருஷ்ணவேணியும் உடந்தையாக இருந்துள்ளார். படுகாயங்கள் உடன் வெங்கடேசனை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இதையடுத்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வெங்கடேசனிடம் கொலை விவகாரத்தை கேட்டறிந்து வழக்குப்பதிவு செய்தோம். இதனிடையே ஷ்ரவன் குமார் அவரது பெற்றோர் தலைமறைவாகினர். அவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று (மார்ச் 16) கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த மேஜர் முகுந்துக்கு ராணுவப் பணியிடத்தில் இறுதி மரியாதை