கேரள மாநிலத்தில் அண்மையில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்தது. கொல்லம் மாவட்டம் திருகோவில் வட்டத்தில் (Thrikovilvattam) சிபிஐஎம் சார்பில் போட்டியிட்ட சாஜத் சலீம் கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.
பல மாதங்களுக்கு முன்னதாகவே சலீமுக்கும், கண்ணாநல்லூரைச் சேர்ந்த அன்சிக்கும் திருமணம் நிச்சயமானது. சலீம் ஒரு அரசியல்வாதி என்பதாலேயே அன்சிக்கு அவரை ரொம்பவும் பிடித்துப் போனது. இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 21ஆம் தேதி திருமண ஏற்பாடு செய்திருந்த நிலையில் தான், கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
சலீம் தேர்தல் பணிகளுக்கு நடுவே தனது திருமண ஏற்பாடுகளையும் உற்சாகமாகச் செய்துவந்தார். எதிர்பாராதவிதமாக அவரது திருமணத்திற்கு குறிக்கப்பட்ட அதே தேதியன்றே பதவியேற்பு விழாவும் முடிவானது.
இருப்பினும் அவரது குடும்பத்தினரும், குறிப்பாக அன்சியும் அவருக்கு முழு ஆதரவளித்து பதவியேற்பு விழாவிற்கு அனுப்பிவைத்தனர். சலீம் விழாவில் கலந்து கொண்டு, பதவியேற்ற பின்னர் அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் வெற்றி கொண்டாட்ட மனநிலையில் சலீம் இருந்தாலும், தனக்காக காத்திருந்த அன்சிக்காக விரைந்து மணமேடைக்கு வந்து அவரின் கரம் பிடித்தார்.
ஊராட்சி மன்ற உறுப்பினராக பதவியேற்ற சில கணங்களிலேயே மணமகனாக மாறிய சலீமிற்கு நேற்று மறக்க முடியாத நாளாக இருந்திருக்கும். இந்தத் திருமணம் சொந்த பந்தங்களுடன் நடைபெற்றாலும் கரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன.
இதையும் படிங்க:'ஹேப்பி பர்த்டே டார்லிங்'..., மனைவிக்கு வாழ்த்து கூறிய ஹிட்மேன்!