நாடாளுமன்றத் தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான வலுவான ஒன்று திரட்டப்பட்ட கூட்டணியை மம்தா உருவாக்க முனைவதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோடியின் பிரபலமான #Aab ki bar Modi sarkar (இந்த முறை மோடியின் சர்கார்) என்ற முழக்கத்தை மாற்றி #Aab ki bar didi sarkar (இந்த முறை டிடியின் (மம்தா) சர்கார்) என மோடிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் ட்ரெண்டாகியுள்ளன.
அதேபோல், மோடியை மம்தா சந்தித்துள்ள நிலையில் Acche din (நல்ல நாள்) என்ற மோடியின் முழக்கத்தை மாற்றி SaccheDin (நம்பகமான நாள்) என்றும் முழக்கமிடுகின்றனர்.
மேலும், பாஜக அரசு பொய் வாக்குறுதிகளை கொண்டே ஆட்சி செய்துவருவதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைமை விமர்சனத்தையும் வைக்கிறது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஒருவர் கூறுகையில், "ஒன்றிய அரசு தனது நிறைவேற்ற முடியாத பொய் வாக்குறுதிகளை மறைத்து பொய் பரப்புரை மேற்கொண்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் இந்த பொய் வாக்குறுதிகளுக்கு மாறாக நாங்கள் உண்மையான வளர்ச்சியை மேற்கொள்வோம்" என்றார்.
இதற்கிடையே, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகனும், முன்னாள் காங்கிரஸ் மக்களவை உறுப்பினருமான அவிஜித் முகர்ஜி அண்மையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
"மேற்கு வங்கத்தைப் போல இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு கிரிஷக்பந்து திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் வழங்கப்படும். நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் விவசாயிகள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். ஒன்றிய அரசில் மாற்றம் கொண்டு வந்தால் அவர்கள் முகத்தில் நாம் மீண்டும் மகிழ்ச்சியை கொண்டுவரலாம்" எனவும் கூறினார்.
இதுமட்டுமின்றி, நரேந்திர மோடிக்கு எதிராக இந்தியாவில் உள்ள நம்பகமான ஒரே நபர் மம்தா மட்டும்தான் எனக் குறிப்பிடும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த சட்டப்பேரவை உறுப்பினர் தபஸ் ராய், ’நாட்டு மக்கள் மம்தாவை பிரதமராக பார்க்க விரும்புகிறார்கள். இந்தியாவில் புதிய அரசு ஆட்சிக்கு வந்ததும், பொய்கள் முடிவுக்கு வரும். இந்தியாவில் பொய் பரப்புரைகளுக்கு முடிவு கட்டி, நேர்மையான நாள்களை #Sacche Din கொண்டுவரும்’ என்றார்.
இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம்- அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!