புதுச்சேரி: புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.2.87 கோடி மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்ட நவீன ஊடு கதிர் மின் அணு நிறமாலைக் அளவீட்டுத் தொழில்நுட்பக் கருவியை பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் மத்தியக் கருவிமயமாக்கல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிற உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி முனைவர் பட்ட மாணவர்கள் பல்வேறு நவீன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பேராசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் ஆராய்ச்சிகளை மேலும் ஊக்கப்படுத்துகின்ற வகையில், புதுச்சேரி பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, பல்கலைக்கழக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டுத் திட்ட நிதி உதவியோடு ரூ.2.87 கோடி மதிப்பிலான நவீன ஊடு கதிர் மின் அணு நிறமாலைக் அளவீட்டுத் தொழில்நுட்பக் கருவி கொள்முதல் செய்யப்பட்டது.
இதனை ஆராய்ச்சி மாணவர்களுக்கு அர்ப்பணிக்கும் விழா, மத்தியக் கருவி மயமாக்கல் மைய ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று(ஜூலை 29) நடந்தது. அப்போது மையத்தின் தலைவர் பேராசிரியர் பால.மணிமாறன் வரவேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ரவி காந்த் குமார் மற்றும் உயிர் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் துறைப் பேராசிரியர் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தார்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் குர்மீத் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கருவியை ஆராய்ச்சி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "வேதியியல் பகுப்பாய்வுத் துறையில் பெரும் பயனைத் தரக்கூடிய புதிய நவீனத் தொழில்நுட்பக் கருவியைப் பயன்படுத்தி மாணவர்களும், பேராசிரியர்களும் உலகத் தரத்திலான ஆராய்ச்சிகளில் ஈடுபட ஆர்வம் காட்ட வேண்டும்.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி தனிமங்களின் காற்று நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை எளிதல் கண்டறிய முடியும்.
அதனால் வேதியியல், இயற்பியல், பொறியியல் மற்றும் உயிரியல் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள முயல வேண்டும்.
ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் என்பதால் மாணவர்கள் அனைவரும் ஆராய்ச்சிக் கூடங்களில் ஆய்வுகளை ஆர்வத்தோடு செய்ய வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.