டெல்லி: மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் பகுதியில் இருந்து மியான்மர் எல்லை வரையிலான வடகிழக்கு எல்லை ரயில்வே திட்டத்திற்கான இடங்களை ஆய்வு செய்யும் பணிக்கு மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மொத்தம் 223 கிலோ மீட்டர் கொண்ட இந்த ரயில்பாதை திட்டத்தால் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மேம்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தின் மூலம் பலமடங்கு லாபம் பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய ரயில்வே அமைச்சகம், வட கிழக்கு பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மிசோரம் மாநிலத்தின் அய்ஸ்வால் பகுதி அருகே உள்ள சைராங்கில் இருந்து மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள ஹபிச்சுவா வரையில் இந்த புதிய ரயில் பாதை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. மேலும் வடக்கு மிசோரம் மாநிலத்தில் உள்ள பைராபியை, அய்ஸ்வாலுடன் இணைக்கும் முயற்சியில் சுமார் 51.38 கிலோ மீட்டர் தூரம் வரை ரயில் பாதை விரிவாக்கம் நடைபெற உள்ளது.
மிசோரம் மாநிலத்தின் ரயின் முனையமாக பைராபி உள்ளதால் துறைமுக தொடர்புக்கு இந்த வழி இன்றியமையாததாக இருக்கும் என CUTS இன்டர்நேஷனல் ஆலோசனை குழுவின் இணை இயக்குநர் அர்னாப் கங்குலி ETV Bharat இடம் தெரிவித்து உள்ளார். அது மட்டுமின்றி இந்த ரயில்பாதை திட்டத்தால் வட கிழக்கு பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த வடகிழக்கு எல்லை ரயில்வே திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டிற்கு வர்த்தக ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் பல்வேறு நன்மை பயக்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அர்னாப் கங்குலி, இதன் மூலம் சிட்வே துறைமுகத்தை முழுமையாகக் கையாண்டு அதன் மூலம் லாபம் ஈட்ட முடியும் எனவும் கூறி உள்ளார்.
இந்த துறைமுகம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் 20 ஆயிரம் கப்பல்கள் வரை கையாள முடியும் எனவும் தற்போது வரை 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வரையிலான சரக்கு கப்பல்கள் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் வர்த்தக ரீதியான செலவுகள் பல மடங்கு குறையும் எனவும் பாதுகாப்பான பயணக் கண்ணோட்டத்தையும் உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ரயில்வே வாரியத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி வழங்கி அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூர் பெண்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள்? : பாஜக பெண் எம்.பிக்களுக்கு கேள்வி எழுப்பிய ஐஏஎஸ்