ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் அஸ்கோ கிராமத்தைச்சேர்ந்த மம்தா தேவி என்ற பெண்மணி மகப்பேறுக்காக, கிரிதி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால், மருத்துவக் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கண்காணிப்பு பணியில் இருந்த செவிலி, அதிகாலையில் திடீரென பெற்றோரை அழைத்து, குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். துணியில் சுற்றப்பட்ட குழந்தையைக் கையில் கொடுத்து, மேல் சிகிச்சைக்காக தன்பாத் நகருக்கு (Dhanbad) கொண்டு செல்லும்படி கூறியுள்ளார். இதையடுத்து, தன்பாத் நகருக்கு சென்ற பெற்றோர் மருத்துவரிடம் காண்பித்ததில், குழந்தையை எலி கடித்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சதார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரை அணுகி பிரச்னையைக் கூறியுள்ளனர். அதையடுத்து, சம்பவம் நடந்த அரசு மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், மருத்துவமனை நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடுவோம் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில், குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.