இளவரசராக பிறந்த நேரு, அரசனாக வளர்ந்தவர்; ஆனால், ஆண்டியாக வாழ்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்ட பிறகு, அவர் பொருளாதார நெருக்கடியுடன் தான் வாழ்ந்தார். தனது புத்தகங்களின் பதிப்புரிமைத் தொகை மட்டும் தான், நேருவிற்கு கிடைத்த ஒரே வருமானமாக இருந்தது என, அவரிடம் உதவியாளராக இருந்த மத்தாய் எழுதியுள்ளார்.
வரலாற்றில் இடம்பிடித்துள்ள பல அரசியல் தலைவர்கள் வாழும் போது வில்லனாகவும், இறப்புக்கு பிறகு கதாநாயகனாகவும் கட்டமைக்கப்படுகின்றனர். இதற்கு நேரெதிராக சித்தரிக்கப்படுபவர் நேரு. அவர் இருந்த வரை சுதந்திர இந்தியாவின் ஹீரோவாக விளங்கிய நிலையில், நாட்டின் பல்வேறு பிரச்னைகளுக்கும் அவர் தான் காரணம் என ஒரு சிலர் இன்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தி வருகின்றனர்.
ஒரு தரப்பினர் நேருவை, ‘ இந்திய ஜனநாயகத்தின் தலைமைச் சிற்பி’ என வர்ணிக்க, மற்றொரு தரப்பினர் ‘இந்தியாவின் ஜனநாயத்திற்கு நேரு காரணம் இல்லை’ என்ற வாதத்தை முன் வைக்கின்றனர். இப்படி இருவிதமான கருத்துகள் நிலவி வரும் நிலையில், நேரு ஹீரோவா? வில்லனா? என்பதற்கு வரலாறு நமக்கு பதிலளிக்கிறது.
சோசலிச நேரு
சிறையன்னையால் சீராட்டி வளர்க்கப்பட்டது நேரு எனும் ஆளுமை. அவர் சிரமங்களையும் சித்ரவதைகளையும் கடந்து செல்லும் நெஞ்சுரத்தை காந்தியிடம் இருந்து பெற்றிருந்தார். காந்தி நாடெங்கும் அலைந்து திரிந்து கண்டுணர்ந்த இந்தியாவை, நேரு புத்தகங்களில் கண்டுணர்ந்தார்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து வளர்ச்சியை ஏற்படுத்த சோசலிச கொள்கையைக் கையில் எடுத்தார். சோவியத் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்ட தொழில்மயமாக்கலை கண்டு வியந்ததோடு நிற்காமல், தனது நாட்டிலும் அதைச் செயல்படுத்த விரும்பினார். சுமார் 14 விழுக்காடு படித்தவர்களை மட்டுமே கொண்டிருந்த அன்றைய சுதந்திர இந்தியா, வறுமையில் பிடியில் சிக்கியிருந்தது. அதை மீட்டெடுக்க பொதுவுடைமைக் கொள்கை பிரதான தேவையாக இருந்தது.
சிறை தவச்சாலை
மற்றவர்கள் போல் சிறை தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக நேரு ஒரு போதும் மன்னிப்பு கடிதம் எழுதியது கிடையாது. தனது இளைமைக் காலத்தைச் சிறையில் கழித்த நேரு, ‘சிறையைப் போல ஒரு தவச்சாலை இல்லை’ என சிறை அலுவலர்களிடம் தெரிவித்துள்ளார். தண்டனையைக் கூட தனக்கு சாதகமாக பயன்படுத்தியவர் நேரு. 1921ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை, கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அவர் சிறையில் இருந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில், அரசியல், பொருளாதாரம், அறிவியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகள் குறித்த 188 புத்தகங்களை நேரு படித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நில சீர்திருத்தத்தின் முக்கியத்துவம், நாட்டை கட்டமைப்பதில் பெண்களின் பங்கு குறித்தும் அறிந்து கொண்டார்.
கலப்பு திருமணத்திற்கு அங்கீகாரம், சொத்தில் ஆண்களைப் போல் பெண்களுக்கும் சம உரிமை, பெண் குழந்தைகளைத் தத்தெடுத்தல் போன்றவற்றை சட்டத்தின் நிறைவேற்ற விரும்பிய நேரு, சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் உதவியோடு இந்து சட்ட மசோதாவைக் கொண்டு வந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்த பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேருவால் மசோதாவை சட்டமாக்க முடியவில்லை. இறுதியில், அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நேருவின் தொடர் முயற்சியால் பல்வேறு இன்னல்களைத் தாண்டி பல திருத்தங்களுடன் இந்த மசோதா சட்டமானது.
இந்திய அரசியலமைப்பில் நேருவின் பங்கு
இந்தியா, பலதரப்பட்ட மக்களை உடைய நாடு. இருநூறு இனங்கள், இரண்டாயிரம் சாதிகளுடன் வேற்றுமையின் ஒற்றுமை காணும் நாடாக அடையாளப்படுத்தப்படும் இந்தியா, சுதந்திரம் அடையும் போது சமத்துவமின்றி பிளவுண்டு கிடந்தது. அப்போது, ‘அனைவரும் பங்களிப்பதே உண்மையான ஜனநாயகம்’ என்பதை மனதில் நிறுத்தி செயல்பட்டார், நேரு.
இந்தியாவை சுதந்திர குடியரசு நாடாக பிரகடனப்படுத்தியதில் நேருவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மக்களாட்சி நிலவும் நாட்டில், அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல், நீதியை வழங்கி கருத்து மற்றும் மதச் சுதந்திரத்தை நிலைநாட்டியவர் நேரு. அனைத்து சமூகத்தினருடைய பாதுகாப்பையும் உறுதி செய்தார்.
நில உடைமையாளர்களுக்கு, செல்வந்தவர்களுக்கு மட்டுமிருந்த வாக்குரிமையை, 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வாக்குரிமை என மாற்றியும், பல கட்சி முறையை சாத்தியப்படுத்தியும் இந்தியாவை ஜனநாயக நாடாக பிரகடனப்படுத்தினார். இந்தியா ஒரே நாடாக இருப்பதற்கு தடையாக இருந்த சமூக சமத்துவமின்மை, பிரிவினை வாதம் ஆகியவற்றை துடைத்தெறிய அனைவருக்கும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்து மதசார்பின்மையை தூக்கிப் பிடித்தார்.
உலக அரசியலில் நேரு
உள்நாட்டுப் போர்களால் உருக்குலைந்திருக்க வேண்டிய இந்தியாவை, இன்னொரு ஆப்பிரிக்க நாடாக மாற விடாமல் அரணாக தடுத்து செயல்பட்டவர், நேரு. இனவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்த அவர், ஆசிய நாடுகளின் ஒற்றுமைக்காகவும், ஆசிய ஆப்பிரிக்கா நாடுகள் இணக்கமாக செயல்படவும் உலகில் அமைதி நிலை பெறவும் குரல் கொடுத்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா, ரஷ்யா இரண்டு நாடுகளும் வல்லாதிக்க சக்திகளாக உருவெடுத்தன. உலக நாடுகள் அனைத்தும் இவ்விரண்டு நாடுகளுக்குப் பின் அணிவகுத்தன. ஆனால், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேணி பயன்களை அடையும் நோக்கில், நேரு அணி சேரா கொள்கையை வகுத்தார். இதன்மூலம், வளரும் நாடுகளில் முன்னணி நாடாக உருவெடுத்த இந்தியாவுக்கு தனித்துவமான அடையாளம் கிடைத்தது.
நேருவின் சறுக்கல்கள்
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவு, மதவாதம், சாதியம், இடது தீவிரவாதம், பிரிவினைவாதம் போன்ற எண்ணிலடங்காத பிரச்னைகள் நேருவுக்கு சவால் விட்டபோதும், அனைத்தையும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாக கையாண்டார் நேரு. அந்நியனால் இடித்து நொறுக்கப்பட்ட ஒரு தேசத்தை, அரும்பாடுபட்டு மீட்டெடுத்துக் கட்டினார்.
- ஆனாலும், சில பிரச்னைகளில் தோல்வியை தழுவினார். சீனாவை நட்பு நாடாக ஆக்கிக் கொள்ள விரும்பிய நேருவுக்கு, துரோகமே பரிசாக கிடைத்தது. அந்நாட்டின் உள்நோக்கத்தை நேரு புரிந்து கொள்ளாத காரணத்தால், சீனாவுக்கு எதிரான போரில் இந்தியா வீழ்ந்தது.
- தவறுகளே இழைக்காத ஆட்சியாளனாக நேருவைக் கட்டமைப்பதும் நியாயமானதல்ல. அவரது நீண்ட ஆட்சியில் சில தவறான முடிவுகளையும் அவர் எடுத்தார் என்பதை மறுப்பதற்கில்லை. காஷ்மீர் விவகாரத்தில் வாக்களித்தபடி பொதுவாக்கெடுப்பு நடத்தாதது பெருந்தவறு.
- ஷேக் அப்துல்லாவை கைது செய்ததன் மூலம் காஷ்மீர் விவகாரத்தில் மிகப் பெரிய தவறிழைத்தார் நேரு. மகள் இந்திராவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள் அதிக இடம் கொடுத்ததும் மற்றொரு தவறு.
நேரு ஹீரோவா? வில்லனா? என்பதை அவரவர் புரிதலுக்கு விட்டுவிட வேண்டும். ஆனால், இந்தியாவின் பொக்கிஷங்களில் குறிப்பிடத்தக்கவர் நேரு என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.