சுவிட்சர்லாந்து: லசானே நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியில் காயம் காரணமாக ஒரு மாத காலம் ஓய்வுக்கு பிறகு பங்கேற்ற ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா முதல் இடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். 25 வயதான நீரஜ் சோப்ரா, தசை பிடிப்பு காரணமாக கடந்த மூன்று முக்கிய தடகளப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. மீண்டும் பயிற்சி எடுத்து அதே உற்சாகத்துடன் களமிறங்கிய நீரஜ் சோப்ரா, போட்டியின் ஐந்தாவது த்ரோவில் 87.66 மீட்டர் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.
நீரஜ் சோப்ரா எறிந்த முதல் த்ரோ பவுலாக அமைய, இரண்டாவது த்ரோவில் 83.52 மீட்டர் எறிந்தார். பின்னர் மூன்றாவது த்ரோவில் 85.04 மீட்டர் எறிந்தார். மீண்டும் நான்காவது த்ரோ பவுலாக அமைய, ஆறாவது மற்றும் கடைசி த்ரோவில் 84.15 மீட்டர் எறிந்தார். இந்த நிலையில், டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் பங்கேற்ற ஜெர்மனி நாட்டின் ஜுலியன் வெபர் 87.03 மீட்டர் எறிந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவிற்கு மெட்ரோவில் பயணம் செய்த மோடி..!
செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த ஜாகுப் வட்லேச் 86.13 மீட்டர் எறிந்து மூன்றாவது இடம் பிடித்தார். நீரஜ் சோப்ரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லசானேவில் நடைபெற்ற போட்டியில் முதல் டைமண்ட் லீக் பட்டத்தை வென்றார். பின்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் டைமண்ட் லீக் கோப்பையை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீரஜ் சோப்ரா தோஹாவில் நடைபெற்ற சீசனின் முதல் டைமண்ட் லீக்கில் 88.67 மீட்டர் எறிந்து வெற்றி பெற்றார். இதுவரை அவருடைய சிறந்த ஈட்டி எறிதல் தூரமாக 89.94 மீட்டர் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவைச் சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் ஆண்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் 7.88 மீட்டர் தாண்டி மூன்றாவது சுற்றில் ஐந்தாவது இடம் பிடித்தார். தனது முதல் டைமண்ட் லீக்கில் பங்கேற்ற 24 வயதான ஸ்ரீசங்கர், பாரிஸில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடம் பெற்றார். அந்த போட்டியில் கடந்த முறை செய்த சாதனையான 8.41 மீட்டர் தாண்டுதலை முறியடித்தார்.
இதையும் படிங்க: பளு தூக்கும் வீரர்களுக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்ய வேண்டும் - தங்கப்பதக்கம் வென்ற ஆதர்ஷ் கோரிக்கை