ஹைதராபாத்: 19வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 19ம் தேதி ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் நகரில் தொடங்கியது. இதில் ஈட்டி எறிதலின் இறுதி சுற்று கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா கலந்து கொண்டு 88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து முதல் இடத்தை பிடித்ததன் மூலம் தங்கப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் அவர் 40 ஆண்டு கால உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.
இறுதி போட்டியில் நீரஜ் சோப்ராவுக்கு கடும் போட்டியாக காணப்பட்ட பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், இதில் கலந்து கொண்ட இந்திய வீரர்களான டி.பி மனு, கிஷோர் குமார் ஆகியோர் 5 மற்றும் 6வது இடத்தை பிடித்தனர். இதற்கு இந்தியா முழுவதுமான அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி எராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் பெருமிதம்: ஈட்டி எறிதலில் பல சாதனைகளை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு, காசிநாத் நாயக் ஆசிய விளையாட்டுகளுக்கு முன்னதாக அதாவது 2013 முதல் 2018 வரை பயிற்சியாளராக இருந்துள்ளார். இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இவர் நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சியாளராக இருந்த போது, நீரஜ் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்ல ஆசைப்பட்டவர். ஏனென்றால் 15 வருட விளையாட்டு வாழ்க்கையில் ஈட்டி எறிதல் தங்கப் பதக்கம் என்பது அவருக்கு எட்டாத ஒன்றாக இருந்ததுள்ளது.
இது குறித்து காசிநாத் நாயக்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது; “நீரஜ் சோப்ரா முதலில் போலந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். பின்னர் 2018ம் ஆண்டு நடைபெற்ற காம்வெல்த் விளையாட்டில் தங்கம், அதே ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் தங்கம், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகியவற்றிலும் தங்கப் பதக்கத்தை வென்றார்.
உலக சாம்பியன்ஷிப்பில் மட்டுமே தங்கம் எட்டப்படாமல் இருந்தது. அதை வெல்வதே அவருடைய கனவாக இருந்தது. தற்போது அந்த கனவு பலித்துள்ளது. அவரது நம்பிக்கையே இந்த வெற்றிக்கு காரணம். மேலும், 2024 பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் அவர் உறுதியாக தங்கம் வெல்வார் என்றார். அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டிபி மனு 84.14மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து 6வது இடத்தை வென்றது மிக்க மகிழ்ச்சியை தருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: Asia Cup 2023: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதல்!