நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் நாட்டின் விவசாயம், உணவு பாதுகாப்பு குறித்து பேசுகையில், "வேளாண் துறையில் அறிவியல் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தி, விவசாயிகளுக்கு புதிய யுக்திகளை பயிற்றுவிக்க வேண்டும். அதன் அனைத்து பலன்களும் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும்.
நாட்டின் உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்பதைத் தாண்டி, அதை அதிகரித்து அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
80 விழுக்காடு விவசாயிகள் இரண்டு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தையை வைத்துள்ளனர். இதுபோன்ற சிறு விவசாயிகளை வலுப்படுத்த வேண்டிய காலமிது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் சிறு விவசாயிகளின் செலவீனங்களை தீர்த்துவைக்கிறது.
இதுவரை 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் நிதியுதவி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் சிறு விவசாயிகளுக்கு புதிய திட்டங்களை உருவாக்கி அவர்களை வலு சேர்க்கும் பணியை அரசு மேற்கொள்ளும். நாட்டின் பெருமைமிகு மக்களாக விவசாயிகள் உருவாக வேண்டும்.
அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையை திட்டமிட்டு, 100ஆவது சுதந்திர தினத்தில் நமது இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி