டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. இன்று(டிச.7) அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் ஆம்ஆத்மி அமோக வெற்றி பெற்றுள்ளது. 132 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி மாநகராட்சியின் அதிகாரத்தை பாஜக இழந்துள்ளது.
ஆம்ஆத்மியின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியில் ஆம்ஆத்மி தலைமையகத்தில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அனைவரும் ஒன்று சேர்ந்து டெல்லியில் நிலையை மேம்படுத்த வேண்டும் என்றும், தங்களுக்கு பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் தேவை என்றும் தெரிவித்தார். குறிப்பாக, மத்திய அரசின் உதவியும், பிரதமர் மோடியில் ஆசீர்வாதமும் தேவை என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.