சமீபத்தில் நடந்துமுடிந்த பிகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக 74 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியும் நிதிஷ்குமாரின் கட்சியுமான ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றிபெற்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சராக மீண்டும் நிதிஷ்குமாரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னரே பாஜக நிதிஷ்குமாரிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டதால் அதை மீறுவதற்கு வாய்ப்பில்லை.
வெற்றிக்குப் பின் நவ.13ஆம் தேதி நடைபெற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (நவ.15) நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதில் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது, அமைச்சரவை இலாகாக்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, நவ.13இல் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தற்போதைய சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு சிபாரிசு செய்வதேன முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின் ஆளுநர் பாகு சவுகானைச் சந்தித்த நிதிஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டு, சட்டப்பேரவையைக் கலைப்பதற்கான சிபாரிசு கடிதத்தையும் கொடுத்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் புதிய அரசு பதவியேற்கும் வரை இடைக்கால முதலமைச்சராகச் செயல்படுமாறு நிதிஷ்குமாரிடம் கேட்டுக்கொண்டார்.