ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இம்மாதத்துடன் எட்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த எட்டு ஆண்டுகள் ஏழை மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
சிறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை இந்த எட்டு ஆண்டு கால ஆட்சி பூர்த்தி செய்துள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகான பாஜக அரசு, மக்களின் நம்பிக்கையை சம்பாதித்துள்ளது. இந்த காலகட்டத்தில் உலகமே இந்தியாவை மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறது. இந்தியாவிலும் மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கின்றனர். இந்த நம்பிக்கை எங்கள் பொறுப்பை அதிகரித்துள்ளது.
75-வது சுதந்திர ஆண்டில், அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நாடு நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து பாஜகவும் அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்குகளை நிர்ணயிக்க, மக்களுக்காக தொடர்ந்து உழைக்க திட்டமிடுவதற்கான நேரம் இது.
சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலத்துக்காக மக்கள் மத்தியில் விஷத்தை பரப்புகிறார்கள். நாட்டின் வளர்ச்சிக்கான பிரச்சினைகளில் இருந்து உங்களைத் திசை திருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும், ஆனால் நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்" என்று மோடி கூறினார்.
இதையும் படிங்க: மன்னிப்பை கற்றுக்கொடுத்தவர் எனது அப்பா - ராகுல் காந்தி ட்வீட்