மும்பை: மாகராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான நவாப் மாலிக் இன்று (அக். 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், "மும்பை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஷாருக் கானின் மகன் கடத்தல் வழக்கு முற்றிலும் போலியானது. பாஜகவும், போதைப் பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜகவும் என்பிசியும்
கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினரில் இருவர் பாஜகவை சேர்ந்தவர்கள் என அவர்களின் முகநூல் பக்கத்தில் உள்ளது. மேலும், மனீஷ் பானுசாலி என்பவர் பாஜகவின் மூத்த தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் கடந்த மாதம் முழுவதும் குற்ற புலானாய்வு செய்தியாளர்களிடம் பரப்பப்பட்டது. மேலும், அவர்களின் அடுத்த இலக்கு நடிகர் ஷாருக் கான்தான்" என குற்றஞ்சாட்டினார்.
புகைப்படங்களால் எழும் புகைச்சல்
போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கப்பலில் எடுக்கப்படவில்லை எனவும் அனைத்து புகைப்படங்களும் மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஷாருக் கான் மகன் ஆரியன் கான் உள்பட 8 பேரை போதைப்பொருள் பயன்படுத்தியதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணையில் எடுத்தனர்.
ஆரியன் கான், ஆர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகிய மூவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்கள் அக்டோபர் 3ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.
காவல் நாளையுடன் முடிவு
இதையடுத்து, இந்த மூவரையும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அக்டோபர் 7ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஷாருக்கான் மகனுக்கு அக். 7 வரை காவல் நீட்டிப்பு