புனே (மகாராஷ்டிரா): உத்தரப்பிரதேசம், ஞானவாபி மசூதியைப் போன்று புனேவில் கோயில் நிலத்தில் இரண்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன என நவநிர்மாண் சேனா பொதுச்செயலாளர் அஜய் ஷிண்டே தெரிவித்தார்.
புனேவில் புண்யேஷ்வர் மற்றும் நாராயணேஷ்வர் கோயில்கள் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் சோட்டா ஷேக் மற்றும் படா ஷேக் பெயரில் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன எனவும்; கோயில் நிலத்தை மீட்கப் போராட்டம் நடத்தப்படும் என அஜய் ஷிண்டே தெரிவித்தார்.
நேற்று(மே 22) புனேயில் நடந்த ராஜ் தாக்கரே கூட்டத்தில் பேசிய எம்என்எஸ் (MNS)பொதுச் செயலாளர் அஜய் ஷிண்டே, ’புனேவில் இரண்டு வரலாற்றுக் கோயில்கள் இருந்தன. அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக் காலத்திலும், பின்னர், ஔரங்கசீப் காலத்திலும் கோயில்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டன. தற்போது, கஸ்பா பேத்தில் உள்ள கும்பர்வாடாவில் உள்ள புண்யேஷ்வர் கோயில் நிலத்தில் சோட்டா ஷேக் என்ற பெயரில் மசூதி கட்டப்பட்டுள்ளது.
நாராயணேஷ்வர் கோயில் இடத்தில் கட்டப்பட்ட மசூதிக்கு படா ஷேக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கோயில் நிலங்களை மீட்கப் போராடுவோம்’ என்று தெரிவித்தார்.
மேலும் கோயில் நிலங்களை மீட்க நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதி வழியில் போராடுவோம் என இந்து மகாசங்கத் தலைவர் ஆனந்த் தவே தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் நாளை தீர்ப்பு!