குர்தாஸ்பூர்: சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குருநானக் தேவ் இறுதியாகச் சென்ற இடம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் ஆகும். இதையும் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரையும் இணைக்கும் கர்தார்பூர் நடைபாதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசால் கடந்த புதன்கிழமை (நவம்பர் 17) மீண்டும் திறக்கப்பட்டது.
நுழைவு இசைவு இல்லாமல் பாகிஸ்தான் செல்ல இந்தப் பாதை பயன்படுத்தப்படுகிறது. 4.7 கி.மீ. தூரம் உள்ள இந்தப் பாதை இந்திய எல்லையையும், பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தர்பார் சாகிப்பையும் இணைக்கும் பாதையாக உள்ளது. 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாதை கரோனா காரணமாக நீண்ட நாள்களாக மூடப்பட்டிருந்தது.
சித்து - இம்ரான் கான் நட்பு
இதையடுத்து, குருத்வாரா தர்பார் சாகிப்புக்கு பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சன்னி, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் செல்லும் குழுவினரின் பெயர் பட்டியல் நவம்பர் 18ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் பெயர் இடம்பெறவில்லை என்பதால் புது சர்ச்சை ஒன்று கிளம்பியது.
இந்நிலையில், சித்து பாகிஸ்தானில் உள்ள அந்த குருத்வாராவுக்குச் செல்ல இன்று கர்தார்பூர் நடைபாதை கடந்து பாகிஸ்தான் சென்றடைந்தார். கர்தார்பூர் நடைபாதை திறக்கப்பட்டதற்கு நவ்ஜோத் சிங் சித்து பெரும் பங்கு வகித்தார். குறிப்பாக, நவ்ஜோத் சிங் சித்துவின் பணியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு பாராட்டி இருந்தது.
மேலும், இருவரும் சர்வதேச அரங்கில் ஒரே சமயத்தில் கிரிக்கெட் விளையாடியவர்கள் என்பதால் 2018ஆம் ஆண்டு இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் சித்து பங்கேற்றார். இதன்பின்னரே, அவர்களின் நட்புறவு வெளியுலகிற்குத் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Andhra Rains: கனமழை காரணமாக ஆந்திராவில் 20 பேர் மரணம்