ஹவேரி: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரைத் தொடங்கியது. தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் நிலையில், ஏழாம் நாளான இன்றும் (மார்ச் 2) நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் முன்னேறி வருகின்றன.
முன்னதாக, உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ்வில் நேற்று (மார்ச் 1) நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின்போது, இந்திய மாணவர் நவீன் சேகரப்பா (22) உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவர் கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்; கார்கீவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு, மருத்துவப் படிப்பு பயின்று வந்ததும் தெரியவந்தது.
நீட் தேர்வை மறைமுகமாக சாடிய நவீனின் தந்தை
இந்நிலையில், ஹவேரி மாவட்டத்தில் உள்ள நவீனின் சொந்தக்கிராமத்தில் அவரது தந்தை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பள்ளிக்கல்வியை எனது மகன் 97 விழுக்காடு மதிப்பெண்களுடன் முடித்தான். இருப்பினும், அவனுக்கு இந்த மாநிலத்தில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இங்கு ஒரு மருத்துவம் படிக்க ஒரு சீட்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படுகின்றன.
ஆனால், அதே கல்வியை வெளிநாட்டில் குறைந்த செலவில் படிக்க முடிகிறது" என நாட்டின் கல்வியமைப்பின் மீதான தனது ஆதங்கத்தை உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக, என்னதான் 12ஆவது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நீட் என்னும் தகுதித்தேர்வின் அடிப்படையில் தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நீட் தேர்வு, மிகவும் கடினமான பாடத்திட்டத்தை உள்ளடக்கி இருப்பதே இந்தியாவில் பலர் மருத்துவம் படிக்கமுடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கார்கீவ்வில் இருந்து உடனே வெளியேறுங்கள் - இந்தியர்களுக்கு அவசர உத்தரவு