கேரளா: விஷு பம்பர் லாட்டரி என்பது கேரள மாநில லாட்டரி துறையின், விஷு பண்டிகையினை ஒட்டி நடத்தப்படும் பரிசுக்குலுக்கல் ஆகும். அந்த வகையில், இந்தாண்டு, 91வது பம்பர் பரிசுக் குலுக்கல் நடைபெற்றது. 2023ஆம் ஆண்டில் சுமார் 42 லட்சம் விஷு பம்பர் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, ஒரு சீட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு விஷு பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக 12 கோடி ரூபாயும், இரண்டாவது பரிசாக ஆறு பேருக்குத் தலா ஒரு கோடி ரூபாயும், மூன்றாவது பரிசாக ஆறு பேருக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான விஷு பம்பர் லாட்டரி முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அதன்படி, VE 475588 என்ற லாட்டரி சீட்டிற்கு முதல் பரிசு கிடைத்தது. VA 513003, VB 678985, VC 743934, VD 175757, VE 797565, VG 642218 ஆகிய ஆறு லாட்டரி சீட்டுகளுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.
VA 214064, VB 770679, VC 584088, VD 265117, VE 244099, VG 412997 ஆகிய லாட்டரி சீட்டுகளுக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. இதில், முதல் பரிசு பெற்ற நபர் யார்? என்பது குறித்த விவரங்களை லாட்டரித் துறையினர் வெளியிடவில்லை.
இந்த நிலையில், சுமார் ஒரு மாதம் கழித்து பரிசு பெற்ற நபரின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கோழிக்கோட்டைச் சேர்ந்த நபருக்கு விஷு பம்பர் லாட்டரியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. அவர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொண்டதன் பேரில், அவரது விவரங்கள் வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. கடந்த 22ஆம் தேதி அந்த நபர் நேரில் சென்று பரிசுத் தொகையை வாங்கியுள்ளார்.
முதல் பரிசுக்கான 12 கோடி ரூபாயில், வரி உள்ளிட்ட பிடித்தங்கள் போக 7.56 கோடி ரூபாயை பெற்றுச் சென்றுள்ளார். அதன் பிறகும் தனது பெயரையோ, பிற தகவல்களையோ வெளியிட அவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முதல் பரிசு வென்ற லாட்டரிச் சீட்டை மலப்புரம் மாவட்டம், திரூரில் உள்ள எம்5087 ஏஜென்சியில் இருந்து ஆதர்ஷ் என்ற முகவர் விற்பனை செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு, கேரளாவில் ஓணம் லாட்டரியில் முதல் பரிசை ஆட்டோ ஓட்டுநர் வென்றார். அவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் பரிசாக கிடைத்தது. மலேசியாவுக்குச் சமையல்காரராகப் பணிக்கு செல்லத் திட்டமிட்டிருந்த ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரி அடித்ததால், அவர் வெளிநாடு செல்லும் திட்டத்தைக் கைவிட்டார்.