கோயம்புத்தூர்: சுங்கம் பகுதியில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சிக்காக வந்த தன்னை, சக விமானப்படை அலுவலர் அமிதேஷ் ஹார்முக் (விமானப்படை லெப்டினென்ட்) பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், அமிதேஷ் ஹர்முக் (29) கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 376இன்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கோயம்புத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட பெண் அலுவலரும், விமானப்படை கல்லூரி அலுவலர்களும் முன்னிலையாகினர்.
எஃப்.ஐ.ஆர்.இல் என்ன உள்ளது?
அப்போது இந்த வழக்கைத் தாங்கள் விசாரித்துக் கொள்வதாகவும் அமிதேஷை தங்களிடம் ஒப்படைக்கும்படியும் விமானப்படை கல்லூரி அலுவலர்கள் தரப்பில் நீதிபதியிடம் கூறப்பட்டது. அதே சமயம் இந்த வழக்கை காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் கூறியதால் இந்த வழக்கு 30ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியானது. அதில், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர், "பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விமானப்படை உயர் அலுவலர்களிடம் புகார் அளிக்க அலைக்கழிக்கப்பட்டேன். இந்தப் புகாரைத் திரும்பப் பெற உயர் அலுவலர்கள் வற்புறுத்தினர்.
ஆதாரங்கள் அளிக்க வாய்ப்பு
என்னை குறித்து விசாரணை மேற்கொள்ள உச்ச நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை செய்யப்பட்டது. பாலியல் வன்புணர்வு சம்பவம் நடந்தபோது படுக்கையில் இருந்த பெட்சீட், இதர துணிகள் ஆகியவற்றை ஒப்படைத்தும், அந்த அறையை அலுவலர்கள் சீல்வைக்காமல் சாதரணப் பூட்டு போட்டுள்ளனர். இதனால் தடயங்களை அளிக்க வாய்ப்புள்ளது.
மேலும், பரிசோதனைக்கு பெட்சீட்டை அளித்தும் காலதாமதம் ஆனதால் ஆதாரங்கள் அளிந்திருக்க வாய்ப்பிருக்கக் கூடும்" எனத் தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், தடைசெய்யப்பட்ட இரு-விரல் பரிசோதனை அப்பெண்ணிற்கு மேற்கொள்ளப்பட்டது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் நேகா சர்மா, விமானப்படை தலைமைத் தளபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, "தடைசெய்யப்பட்ட இந்தப் பரிசோதனையை விமானப்படை மருத்துவர்கள் மேற்கொண்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் மிகவும் அதிருப்தியுடன்கூடிய கண்டனத்தைப் பதிவுசெய்கிறது.
இரு-விரல் பரிசோதனை அறிவியல்பூர்வமற்றது
மேலும், இந்தப் பரிசோதனை மேற்கொண்டதன் மூலம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மருத்துவர்கள் மீறியுள்ளனர். அது மட்டுமில்லாமல் இது பாதிக்கப்பட்டவரின் தனியுரிமை, கண்ணியத்திற்கான உரிமையை மீறும் செயலாகும்.
இந்த இரு-விரல் பரிசோதனை 2014ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் தனது வழிகாட்டு நெறிமுறைகளில் அறிவியல்பூர்வமற்றது என நிறுவியுள்ளதை விமானப்படை மருத்துவர்களுக்குத் தாங்கள் அறிவுறுத்த வேண்டும். அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரு-விரல் பரிசோதனை என்றால் என்ன?
இரு-விரல் பரிசோதனை என்பது நேரடியாக ஒரு விரல் அல்லது இரண்டு விரல்களைக் கொண்டு பெண்ணின் பிறப்பு உறுப்பில் பரிசோதனை செய்யப்படும். இது அப்பெண்ணின் பிறப்புறுப்பு அதன் தளர்வு குறித்தும், கன்னித்திரை உள்ளதா என்பது குறித்தும் பரிசோதிக்கப்படும் முறையாக இருந்தது.
இது, அறிவியல்பூர்வமற்றது எனவும் பாலியல் ரீதியான வன்முறை எனவும் கூறி இப்பரிசோதனைக்குத் தடைவிதித்து உச்ச நீதிமன்றம் 2013ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமை: விமானப்படை அலுவலர் சிறையில் அடைப்பு