அகமதாபாத்: 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் நாரோதா காம் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் மாயா கோத்னானி மற்றும் முன்னாள் பஜ்ரங் தள தலைவர் பாபு பஜ்ரங்கி ஆகியோரை விடுதலை செய்து குஜராத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002, பிப்ரவரி 28 அன்று அகமதாபாத் நகரில் உள்ள நாரோதா காம் பகுதியில் வகுப்புவாத தாக்குதலில் 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்வு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் நடைபெற்றது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 84 பேரில், 18 பேர் வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்தனர். மேலும், விசாரணையின்போது 182 சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த வழக்கானது இந்தியச் சட்டம் பிரிவு 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 143 (சட்ட விரோதமாக கூடுதல்), 147 (கலவரத்தை ஏற்படுத்துதல்), 148 (பயங்கர ஆயுதங்கள் உடன் கலவரத்தில் ஈடுபடுதல்), 120 பி (குற்றம் செய்ய திட்டமிடுதல்) மற்றும் 153 (கலவரத்தைத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு மரண தண்டனையே அதிகபட்ச தண்டனை ஆகும்.
குற்றம்சாட்டப்பட்ட 68 பேருக்கு எதிராக சிறப்பு புலனாய்வு முகமையால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையின் மூலம் சிறப்பு நீதிபதி எஸ்.கே.பாக்ஸி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கானது, சிறப்பு புலனாய்வு முகமையால் விசாரணை செய்யப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த 2022 வகுப்புவாத கலவரங்கள் உடன் தொடர்புடைய 9 முக்கிய வழக்குகளில் ஒன்றாகும். 2010 முதல் சுமார் 13 வருடங்கள் நடைபெற்ற விசாரணையில், இதுவரை 187 அரசு தரப்பு விசாரணையும், 57 சாட்சியங்களும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணையில் 6 நீதிபதிகள் தலைமை வகித்துள்ளதாக சிறப்பு வழக்கறிஞர் சுரேஷ் ஷா கூறியுள்ளார். மேலும், கடந்த 2017ஆம் ஆண்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ மாயா கோத்னானி தரப்பு சாட்சியாக தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆஜரானார்.
மேலும், கலவரம் நடந்தபோது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ், கோத்னானி அமைச்சராக பதவி வகித்தார். அதேநேரம், இந்த கலவர வழக்கில் அவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடிக் அகமது கொலைச் சம்பவம்: நீதி விசாரணைக்குழு முன் நடித்துக் காட்டிய புலனாய்வுக் குழுவினர்!