கடந்த 2020ஆம் ஆண்டு, சந்தேகத்திற்குரிய 1,600 போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைதுசெய்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை இயக்குநர் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்தாண்டு, போதைப்பொருள் மற்றும் அதன் கடத்தல்காரர்களுக்கு எதிராக மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 1,132 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 1,672 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அதில், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 35 கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாதத்திற்கு அடுத்தபடியாகப் போதைப்பொருள் கடத்தல் மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. முதன்மையாக, இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி கிடைக்கிறது. இரண்டாவது, இளைஞர்களை அது சீரழிக்கிறது. காவல் துறையினருக்கும் பொது சமூகத்திற்கு அது மிகப்பெரிய சவால் விடுக்கிறது.
இந்தாண்டு, 152.18 கிலோ ஹெராயினும் 563.61 கிலோ கஞ்சாவும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 22,230.48 கிலோ ஓபியம், பாப்பி வகை போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. ஜம்முவின் ஹந்த்வாரா, புட்கம், அர்னியா ஆகிய இடங்களில் இயங்கிவந்த போதைப்பொருள் கும்பலைப் பிடித்துள்ளோம்" என்றார்.